Monday, March 3, 2008

நுழைவாயில்....

கவிதைகள்..


நந்தவன நிலா..

காதல் முதல் காதல் வரை

த‌லைய‌ணை விடு தூது...

மருதாணிச்செடியில் பூத்த மல்லிகை

வலைகள் வைத்திருக்கும் அலைகள்

எது சொன்னால் விழுவேன்...

கண்ணெழுத்துக்களின் பிம்பம்...

மகரந்தப் பூக்கள்....

நிலாவோடு வாழ்பவன்....

க‌ன‌வுக‌ளில் இருந்து க‌ள‌வாடிய‌வை..

காத்திருப்புக்களின் கையிருப்புகள்

ஆதலினால்....

ஈத்தைகள்

சிக்கு(ம்) கோலங்கள்....

மௌனத்தின் பட்டிமன்றம்...


கட்டுரைகள்...


புத்தகம் மூடிய மயிலிறகு..

மைக் டெஸ்டிங்..ஒன்..டூ...த்ரி...

கும்பிடப் போன தெய்வம்

தரை மேல் பிறப்போம்.. தண்ணீரில் மிதப்போம்...

டூரிங் டாக்கீஸ் கனவுகள்..

இரண்டும் இரண்டும் இருபத்திரண்டு

Monday, February 25, 2008

இரண்டும் இரண்டும் இருபத்திரண்டு

எனது பள்ளி நாள் தோழியை பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.. பரபரப்பின் உச்சமான சென்னை மாநகரத்தின் தெருவொன்றில் அதே பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவின்றி ஓடிக்கொண்டிருந்தவளை அடையாளம் கண்டுபிடித்து நிறுத்தி பேசத்தொடங்கினேன்... பொதுவான பரஸ்பர விசாரிப்புகளை அடுத்து தனது கையில் இருந்த அவளது குழந்தையை எனக்கு அறிமுகப் படுத்தினாள்.. சுமார் இரண்டு வயதிருக்கும் அந்தக் குழந்தைக்கு... அந்த வயதுக்கே உரிய துருதுருப் பார்வையோடு இருந்தது... நான் அந்தக்குழந்தையோடு பேச ஆரம்பிக்கும் போதே தனது பரபரப்பின் காரணத்தை விளக்கத் தொடங்கினாள் அவள்..

"இவனுக்கு அட்மிஷன் இருக்கு..அதுக்காக தான் ஓடிகிட்டே இருக்கேன் என்றாள்..." ஆச்சர்யம் மேலிட இந்தப் பையனுக்கு எத்தனை வயசாகுது என்று கேட்கலானேன்..எனது அந்தக் கேள்வியின் தொடர்ச்சியாய் எனக்கு காத்திருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அறியாதவனாய்... இவனுக்கு ரெண்டு வயசு முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு.. என்றாள்... "அதற்குள் எதற்காக பள்ளியில் சேர்க்க வேண்டும்..அதுவும் இத்தனை பரபரப்பாக எதற்காக ஓட வேண்டும் என்ற என் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாய் அவள் பதில் சொல்லத்தொடங்கினாள்.. " இதுக்கே அட்மிஷன் கிடைக்க எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கு தெரியாது. நாளைக்கு இன்டர்வியு வேறு இருக்கு.." என்றாள்.. இரண்டு வயதுக் குழந்தையிடம் என்ன நேர்முகத்தேர்வு செய்வார்கள்?? எனது குழப்பத்தைக் கண்டவளாய் அவளே அதற்கும் பதில் சொன்னாள்.."இன்டர்வியு இவனுக்கு இல்ல... எனக்கும் இவங்க அப்பாவுக்கும் தான் என்று.." அதிர்ச்சி அலை முகத்தில் ஓங்கி அறைந்தது எனக்கு... இவனைப் பள்ளியில் சேர்ப்பதற்கு உங்கள் இருவரிடமும் என்ன கேட்கப் போகிறார்கள்?? என்றேன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்... "நாங்க எப்படி சொல்லிக்கொடுப்போம் வீட்டுலனு கேப்பாங்க.." என்றாள்.. இதென்ன பைத்தியக்காரத்தனம்..பள்ளியில் சேர்ப்பதே சொல்லிக் கொடுக்கத்தானே..அதை நீங்களே செய்துவிட்டால் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் என்ற‌ என் கேள்வி அவளை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம்..அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "இது சிட்டிலயே பெரிய ஸ்கூல்..அதுவும் இல்லாம ரைம்ஸ் எல்லாம் நல்லா சொல்லித்தராங்க.." என்று பொறுமையாக விளக்கம் சொல்லிக்கொண்டே போனாள்... இவ‌ன் கூட‌ ந‌ல்லா ரைம்ஸ் எல்லாம் சொல்லுவான்..என்று சொல்லிய‌வ‌ள்.."அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லிக்காட்டு என்றாள்... ம‌ழ‌லை மாறாத‌ அந்த‌ப் ப‌ச்சைக் குழ‌ந்தை

"ரெயின் ரெயின் கோ அவே... க‌ம் அகைன் அன‌த‌ர் டே..." என்று சொல்ல‌த்தொட‌ங்கிய‌து...

காவிரித்த‌ண்ணீருக்காக‌ க‌ர்நாட‌க‌ மாநில‌த்திட‌ம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் த‌மிழ‌க‌த்தில்..
வ‌ருகிற‌ ம‌ழையையும் வ‌ராதே என்று பாட, பிள்ளைக‌ளுக்கு சொல்லிக்கொடுக்கிற‌ ப‌ள்ளிக்குத்தான் இத்த‌னை போராட்டமா??? என்று நான் ம‌ன‌துக்குள் புழுங்கிக் கொண்டிருப்ப‌தை அறியாம‌ல், "பாத்தீங்க‌ளா..இதுக்கு தான் இவ்ளோ க‌ஷ்ட‌ப் ப‌ட‌ற‌தும்..." என்றாள்.. கடைசியாக‌ அவ‌ளிட‌ம் ஒன்றைக் கேட்டே தீருவ‌து என்று தீர்மானித்த‌வ‌னாய்.."அப்ப‌டியே இருந்தாலும் இந்த‌க் குழந்தைக்கு ரெண்டு வ‌ய‌சு தானே ஆகுது.. மூணு வ‌ய‌தில் தானே எல்.கே.ஜி யில் சேர்ப்பார்கள்???" என்று கேட்டேன்.. அதிர்ச்சியின் எல்லைக்கே நான் சென்று விழும்ப‌டி ஒரு ப‌தில் வ‌ந்த‌து அவ‌ளிட‌மிருந்து... "இது எல்.கே.ஜி அட்மிஷ‌ன் இல்ல‌... ப்ரீ.கே.ஜி அட்மிஷ‌ன்.. அப்டியே விட்டுடா அவ‌ங்க‌ளே எல்.கே.ஜி ல‌ போட்டுடுவாங்க" என்று ச‌ர்வ‌சாதார‌ண‌மாய் ப‌தில் சொன்னாள்... "ந‌ம்ம‌ காலம் எல்லாம் வேற‌ங்க‌...இதுக்கே நான் மூணு நாளா வ‌ரிச‌யில‌ நின்னு இன்னிக்கு தான் கெட‌ச்சிருக்கு என்றபடி தனது ஓட்டத்தை தொடரலானாள்...அத‌ற்கு மேலும் அவ‌ளிட‌ம் பேச‌ எதுவும் தோன்றாம‌லும், விரும்பாம‌லும் பேசாது இருந்தேன்..இருந்தாலும் க‌டைசியாய் அவ‌ள் சொல்லிப்போன‌ வ‌ரி என்னை பின்னோக்கி அழைத்துச் சென்ற‌து...

ஐந்து வ‌ய‌தில் என்னை ஒன்றாம் வ‌குப்பில் சேர்ப்ப‌த‌ற்காக‌ ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ளை எல்லாம் ம‌ன‌சு அசைபோடத் தொட‌ங்கிய‌து.. வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் பார்த்த‌ நாள் ஒன்றில் தெருவே அதிரும் ப‌டியாக‌ நான் போட்ட‌ கூப்பாடுக‌ளுக்கும், கால்க‌ளையும் கைக‌ளையும் உதைத்துக் கொண்டு "நான் போமாட்டேன்..போமாட்டேன்... என்ன‌ விடுடா..என்ன விடுடி" (அந்த‌ நேர‌த்தில் என்னிட‌ம் ம‌ரியாதை எதிர்பார்ப்ப‌து த‌வ‌று...) என்று நான் அடித்த‌ ர‌க‌ளைக‌ளுக்கும் இடையில் வெள்ளைச் சட்டை, நீலக் கால்சட்டையில் இருந்த என்னை சைக்கிளின் கேரிய‌ரில் திணித்து, என‌து பையை அப்பாவே த‌ன‌து தோளில் தொங்க‌விட்டப‌டி ப‌ள்ளிக்கு அழைத்துச் சென்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் நினைவுக்கு வ‌ந்த‌து...ஊரில் அப்பா பெரிய மனிதர் என்பதால் ப‌ள்ளியில் என‌க்கு பெஞ்சில் இடம் கிடைக்கும் முன்பே என் அப்பாவுக்கு நாற்காலி கிடைத்த‌து.. பையில் எடுத்து வ‌ந்திருந்த‌ ஆர‌ஞ்சு சுளை மிட்டாய்க‌ளை என் சார்பாக‌ டீச்ச்ரே வ‌ழ‌ங்கினார்... என‌க்கு கொடுத்த மிட்டாயில் அதுவ‌ரை நான் அடித்த‌ கொட்ட‌ங்களும் அழுகையும் முன‌க‌ல்க‌ளோடு மெல்ல‌க் க‌ரைய‌த்தொட‌ங்கிய‌து...

மீண்டும் நிக‌ழ்கால‌த்துக்கு வ‌ந்தேன்..ஆனால் கேள்விக‌ள் ம‌ட்டும் என்னை துர‌த்திக் கொண்டே இருக்கின்ற‌ன‌.. இவ‌ளைப் போல‌வே இன்னொரு இட‌த்தில் நான் கேட்ட‌ செய்தி இன்னும் என‌க்கு பேர‌திர்ச்சியாக‌வே இருக்கிற‌து.. "எங்க‌ பையன் இப்பொவே எவ்ளோ ந‌ல்லா க‌ராத்தே ச‌ண்டை போட‌றான் தெரியுமா??" என்ற ஒரு த‌க‌ப்ப‌னைப் பார்த்து விக்கித்துப் போனேன்.. ரெண்டு வ‌யதுப் பிள்ளை படிக்கக் கற்றுக்கொள்வதில் கூட‌ ஒரு பெற்றோருக்கு பெருமை இருக்க‌லாம்... ரெண்டு வ‌ய‌துப் பிள்ளை அடிக்க‌க் க‌ற்றுக்கொள்வ‌து என்ன‌ பெருமை என்று இன்ன‌மும் என‌க்கு விள‌ங்க‌வே இல்லை... த‌லையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து வ‌ந்தேன்..

ஒரு பெரிய ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் இன்று பொறுப்பான‌ ப‌த‌வியில் இருக்கும் நாங்க‌ள் எல்லாம் பள்ளிப் பருவத்தில் இதையா க‌ற்றுக்கொண்டு வ‌ந்தோம்... ப‌ள்ளியின் அள‌வு பெரிய‌தாக‌ இருப்ப‌தால் மட்டும் இர‌ண்டும் இர‌ண்டும் சேர்ந்தால் இருப‌த்திர‌ண்டா வ‌ர‌ப்போகிற‌து... இதே நிலை நீடித்தால் இன்னும் ஐந்து ஆண்டுக‌ள் க‌ழித்து முத‌லிர‌வு அறைக்குச் செல்லு முன்னே ப‌ள்ளியில் சேர்க்கும் விண்ண‌ப்ப‌டிவ‌த்தோடு தான் செல்ல‌ வேண்டும் போலிருக்கிற‌து..."எப்ப‌டியும் ஒரு வ‌ருஷத்துல எதாவ‌து ஒண்ணு பொற‌ந்துரும் சார்..இப்போவே சீட்ட‌ குடுத்துட்டீங்க‌ன்னா..பின்னாடி அலைய‌ வேண்டி இருக்காது பாருங்க‌.." என்று கேட்கிற‌ நிலையும் வர‌லாம்...
ஆர‌ஞ்சு மிட்டாய் க‌ரைந்து போய்விட்டது... நினைவுக‌ளுக்கும் ம‌னசாட்சியின் கேள்விகளுக்கும் ம‌ட்டும் ச‌க்தியில்லை.. க‌ரைந்து போவ‌த‌ற்கு...

Friday, February 8, 2008

நந்தவன நிலா..

இரவில் பூக்கும்
வெளிச்சப் பூக்கள்
இரவல் கேட்கின்றன‌
நறுமணத்தை

உன் கூந்தலில்
குடியேறும் ஆசையில்

*********************************

குயில்க‌ள் கூடித்
தீர்மான‌ம் போட்டிருக்கின்ற‌ன‌...

உன் வீட்டு
குளிய‌ல‌றையில்
கூடுக‌ட்டிக் கொள்வ‌தென்று...

**********************************

ஆளுந‌ர் கையெழுத்து
இல்லையேல்
செல்லாக்காசாம்

இத‌யத்தில் கையெழுத்திடு...

********************************

ஒரு க‌ன்ன‌த்தில் அறைந்தால்
ம‌று க‌ன்ன‌த்தை காட்டுவேன்

ஓங்கி அறைந்திருக்கிறாய்
உன் க‌ண்க‌ளால்
என் ஒற்றை இத‌ய‌த்தில்..

**********************************

என் இத‌ய‌ம்
திற‌ந்த‌ புத்த‌க‌மென்று
யார் உன‌க்கு சொன்ன‌து?

புர‌ட்டி எடுத்துவிட்டு செல்கிறாயே

*******************************

இத‌ய‌த்திற்கு
எந்த‌ க‌ண்ணாடியிட்டு
ம‌றைப்ப‌து

காத‌ல் வ‌லி ப‌ர‌வாம‌ல் த‌டுக்க‌.

*******************************

நீ
புத்த‌க‌மா?
புல்லாங்குழலா?
தெரிய‌வில்லை

ஆனால்
தீர்மானித்து விட்டேன்
"வாசிப்ப‌து" என்று..

****************************

செவ்வாயில்
ப‌னிக்க‌ட்டி இல்லை என்று
யார் சொன்ன‌து?

நீ தான் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயே..

********************************

காத‌ல் நிர்ண‌ய‌ம் செய்கிற‌து

முத‌லெழுத்துக்க‌ளையும்
த‌லையெழுத்துக்க‌ளையும்

********************************

கைக‌ளில் கோரிக்கை ம‌னுவோடு
காத்திருக்கிறேன்...

நீ ஏற்றுக்கொண்டால்
நான் ஆயுள்கைதி
நிராக‌ரித்தால்
நான் தூக்குக் கைதி...

******************************

ஒவ்வொரு அரிசியிலும்
அதை உண்ப‌வ‌ன் பெய‌ர்
எழுதியிருக்கிற‌து...

ஒவ்வொரு பூவிலும்
உன் பெய‌ர் தான் இருக்கிற‌து...

******************************

உன்னை முத‌லில்
என் அம்மாவிட‌ம் தான்
அறிமுக‌ப்ப‌டுத்த‌வேண்டும்..

அவ‌ள் தான்
உன் வீதியில் என்னை
"பார்த்துப் போ"
என்று சொல்லிய‌னுப்பிய‌து....

******************************

Saturday, February 2, 2008

மௌனத்தின் பட்டிமன்றம்

நீ என்னைத்
தள்ளிவிட்ட இடத்தில்
என்னைத் தாங்கிப் பிடித்துகொண்ட‌து
காத‌ல்...

*********************************

ந‌ம் இருவ‌ருக்கும்
இடையில் வ‌ர‌
யாருக்கும் துணிவில்லை

காத‌லைத் த‌விர‌....

*******************************

ஆப்பிள் ம‌ர‌ம்
அப்ப‌டியே தான் இருக்கிற‌து...

நியூட்ட‌ன்க‌ள் தான்
விழுந்து கொண்டிருக்கிறார்க‌ள்
காத‌லில்....

******************************

இத‌ய‌த்தில் த‌ரைத‌ட்டி நிற்கிற‌து

நேற்று பெய்த‌ ம‌ழையில்
நீ மித‌க்க‌விட்டு ம‌கிழ்ந்த‌
க‌த்திக்க‌ப்ப‌ல்.....

************************

நாம் இருவ‌ருமே
ச‌த்த‌மாக‌ பேசிக்கொண்டிருக்கிறோம்...

யார் முத‌லில் பேசுவ‌து
என்ற‌
மௌன‌த்தின் ப‌ட்டிம‌ன்ற‌த்தில்....

******************************

நீ ஆசையாய் வ‌ளர்க்கும்
பூச்செடிக‌ள் பூத்திருக்கின்ற‌ன‌...

என் காத‌லுக்கா?
என் காதுக‌ளுக்கா?

*****************************

பூக்கோல‌த்துக்கு ந‌டுவே
புள்ளிக‌ள்..

ம‌ச்ச‌ம்...

******************************

கோயில் யானை
உன்னை ஆசீர்வ‌தித்த‌து...

உன் க‌ன்ன‌த்தில் துதிக்கையை வைத்து...

*******************************

ப‌ட்டாம் பூச்சி பிடிக்க‌த் திரிந்த‌வ‌ன்
நான்...

ப‌ட்டாம் பூச்சியாக்கி திரிய‌விட்டிருக்கிறாய்
நீ....

******************************

தூண்டில்கார‌ர்க‌ளை பிடிப்ப‌த‌ற்காக‌வே
வ‌ள‌ர்ந்திருக்கின்ற‌ன‌

உன் விழி மீன்க‌ள்....


****************************

பார்த்துப் போ...

தேர் வ‌ருகிற‌து என்று தெரிந்து
வ‌ழியில்
முண்டிய‌டிக்கின்ற‌ன‌
முல்லைக் கொடிக‌ள்....

**************************

Wednesday, January 30, 2008

காதல் முதல் காதல் வரை

கைகளில் ஏந்திக்கொள்
இல்லையேல்
அணைத்துவிட்டாவது போ..

முனகிக் கொண்டேயிருக்கிறோம்
செல்பேசியும் நானும்...

******************************

இந்த உலகிற்கு வருவதற்காக‌
நீ உடைத்தது
உன் தாயின் பனிக்குடத்தையா?
இல்லை பாற்குடத்தையா?

***********************

என்னுடைய தவங்கள் எல்லாம்
உன்னிடம் வரம் வாங்க அல்ல

உன்னையே வ‌ர‌மாய் வாங்க‌த்தான்...

*********************************

கடிதத்தின் மீது ஒட்டியிருக்கும்
அஞ்சல் தலை மாதிரி
இதயத்தில் நீ

எடுத்துவிட்டால் மதிப்பில்லை அதற்கு....

********************************

உன் இதழ்களின் அழைப்புக்காக‌
காத்திருந்தபோது தான் வந்தது
உன் அழைப்பிதழ்

"அவசியம் வருக" என்ற வாசகத்துடன்...

*********************************

பூங்காக்களில்
காதலைச் சொல்லலாம் தான்...

ஆனால்
பூங்காவிடமே எப்படி??

*********************************

உன்னால் சாமிக‌ளுக்குள் ச‌ண்டை...

நீ மார்போடு அணைத்து வ‌ரும்
ப‌ரீட்சை அட்டையில்
யார் இட‌ம் பிடிப்ப‌து என்று...

***********************************

தூங்கும் குழந்தை சிரித்தால்
க‌ன‌வில் க‌ட‌வுள் வ‌ந்த‌தாக‌ சொல்கிறார்க‌ளே

நான் தூக்க‌த்தில் க‌ண்ண‌டிக்கிறேனாம்
நீ தானே வ‌ந்த‌து...??

**********************************

சாப்பிடும் போது நீ
சாமிக்கு என்று சொல்லி
த‌னியே எடுத்துவைக்கிறாய்...

நானோ
உன‌க்கு என்று சொல்லி
வாயில் போட்டுக்கொள்கிறேன்...

நீ இருப்ப‌து என்னுள் தானே...

*********************************

க‌ன‌வுக‌ளில் மிர‌ட்டிவிட்டுப் போகின்ற‌ன‌
தேவ‌தைக‌ள்...

எங்க‌ள் வீட்டுப் பெண்ணை
எப்ப‌டி நீ காத‌லிக்க‌லாம் என்று...

************************************

சூரியனுக்கு தமிழன்

பொங்கல் வைக்கிறான்..

நீயோ
தமிழனையே
பொங்க வைக்கிறாய்...
....

**********************************


Wednesday, January 23, 2008

த‌லைய‌ணை விடு தூது...

உன்னிடம் தூது செல்ல‌
என் காதலை
முழுதுமாய் அறிந்தவர்
யாருமில்லை

என் தலையணையைத் தவிர......

***************************************

உன் கொலுசு
மணி ஒலிக்கும் போதெல்லாம்

கண்களுக்குள்
கற்பூரம் ஏற்றுகிறது
காதல்....

***************************************

நீ வரும் வரையில்
பொறுப்பதேயில்லை...

நான் மட்டுமல்ல‌
என் கவிதையும் தான்...

*************************************

நட்சத்திரங்களைப் பூக்கிறது
மொட்டைமாடி ரோஜாச்செடி....

அருகில் சென்று
கூந்த‌ல் உல‌ர்த்தினாயா?

************************************

ஆயிர‌ம் முறை
சொல்லிவிட்டாய்
"அப்புற‌ம்" என்று....

ஒரே ஒரு முறை சொல்
உன் காத‌லை...

************************************

பூக்களைப் பறித்தால்
வ‌லிக்கும் என்கிற‌து

ஆனால்
ம‌ர‌த்தில் பெய‌ரைச்
செதுக்கிவைக்கிற‌து....

என்ன‌ காத‌லோ???

***********************************

உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த
க‌விஞர் யார்? என்கிறாய்...

யாராய் இருக்க‌ முடியும்
இத்த‌னை அழ‌காய் உன்னை எழுதிய‌
உன் அம்மாவைத் த‌விர‌.....

*************************************

தெய்வ‌த்தைப் பார்த்தால் அல்ல‌
தேவ‌தையைப் பார்த்தாலும்
அருள் வ‌ரும் என்று
தெரிந்து கொண்டேன்...

நீ என்னைக் க‌ட‌ந்து போன‌ போது.........

***************************************

ப‌டிக்க‌ப்ப‌டாம‌லேயே இருக்கின்றன‌

நீ என‌க்க‌ளித்த‌ முத‌ல் புத்த‌க‌மும்
நான் உன‌க்கெழுதிய‌ முத‌ல் க‌டித‌மும்....

****************************************

உன் துப்ப‌ட்டா
என் மேல்
எங்கு மோதினாலும்

வீங்குவ‌தென்ன‌வோ
என் இத‌ய‌ம் தான்......

***************************************

உன்னை விட்டுவிட்டு
சாப்பிட்டால்
என‌க்கு வ‌யிறுவ‌லிக்கும்
என்கிறாயே....

என்னை விட்டுவிட்டு
இருக்கிறாயே
உன‌க்கு இத‌ய‌மே வ‌லிக்காதா??

***************************************

நீ பூப்ப‌ந்து ஆடும்போதெல்லாம்
ப‌ய‌மாய் இருக்கிற‌து என‌க்கு

எல்லைக் கோட்டைத் தாண்டி
விழுந்துவிடுமோ
என் ம‌ன‌சு என்று.....

***************************************

Tuesday, January 22, 2008

மருதாணிச்செடியில் பூத்த மல்லிகை

உன்னைப் பார்த்து
தெரிந்துகொண்டது
இந்த உலகம்.....

ம‌ருதாணிச் செடியிலும்
ம‌ல்லிகைப்பூ பூக்கும் என்று....

************************************

பாதரசத்தில் கரையாத‌
தங்கமும் கூட இருக்கிறது

உன்
பாதக் கொலுசுகளில்....

************************************

காற்றில் ப‌ட‌ப‌ட‌க்கும்
உன் சிவ‌ப்புத் துப்ப‌ட்டா
அறிவிக்கிற‌து.....

காத‌ல்
மைய‌ம் கொள்ளப் போகிறது
என்று....

*********************************

இர‌வில் வெளியே செல்ல‌

உன‌க்கு அச்ச‌மாக‌ இருக்கிற‌து
இர‌வுக்கு ஆசையாக‌ இருக்கிற‌து
நிலாவுக்கோ பொறாமையாக‌ இருக்கிற‌து....

*********************************

உன்னிட‌ம் தோற்றுப் போகிற‌
ஆட்ட‌ங்க‌ளிலும்

தாய‌க்க‌ட்டை
என‌க்கு
ஆதாய‌க்க‌ட்டை தான்......

**********************************

நீ
குளித்துவிட்டுப் போயிருக்கிறாய்...

இல்லை
ஒரு ஆற்றை திருவையாறாக‌
மாற்றிவிட்டு போகிறாய்........

**********************************

நான்
யாரைக் காதலிக்கிறேன்
எனக் கேட்டார்கள்...

கவிதையை என்றேன்..

உனக்கு தெரியுமே
எனக்கு
பொய் சொல்லவே வராது என்று....

**********************************

ஒரு க‌ல்லூரியே
காத‌ல் தேர்வு
எழுதிக்கொண்டிருக்கிற‌து....

எல்லாம்
"மதி"ப்பெண்ணுக்காக‌த் தான்...

***********************************

கொடியில் காய்கிற‌
உன் ஆடைக‌ளை
க‌ள‌வாடுகிற‌தே...

இது தான்
ப‌ருவ‌க் காற்றா???

**********************************

காத‌லைச் சொல்ல‌ வெட்க‌ப்ப‌ட்டு
உன் கால்விர‌லால் நீ
கோல‌மிட்ட‌ இட‌த்தில்
முளைத்திருக்கிற‌து

ஒரு அழ‌கிய‌
ம‌ருதாணிச் செடி....

********************************

குளிக்கும் போது
நீ கொலுசுக‌ளைக் க‌ழ‌ற்றுகிறாய்
ந‌தி மாட்டிக்கொள்ளுகிற‌து....


********************************